Friday, March 28, 2014

இப்படியும் ஒரு வெறியா !

                                                                         


எண்ணிக் கடக்கும்  வாழ்நாளில் இன்னும் எத்தனை காலங்கள் தான் வாழப் போகின்றோமோ தெரியவில்லை அதற்குள் மனிதன் மனிதனாக வாழும் போது தான் தன்னையும்   பிறரையும் உணரும் வாய்ப்பினைப் பெறுகின்றான் தன்னை உணர்ந்தவனுக்கே  இத் தரணியில் மதிப்பும் மரியாதையும் உயர்கின்றது .பட்டப் படிப்புப் படித்து முடிப்பதனாலோ அல்லது பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொள்வதனாலோ அவன் மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது .நாம் கற்றுக் கொண்ட பாடம் எதுவோ அதையே கடைப்பிடிக்கும் தன்மை முதலில் எங்களுக்குள் இருக்க வேண்டும் .பணம் படைத்தவனுக்கோ  பிறருக்கும் உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் தவிர தான் பெற்ற அறிவையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டு பிறரை அழிப்பதற்கும் இம்சிப்பதற்கும் முயற்சிப்பவனை ஒரு போதும் மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியாது .

பண வெறி என்பது பொதுவாக மனிதர்களுக்குள்  உள்ள குணாதிசயங்களில்  ஒன்றாகும்  .இது எந்த அளவிற்கு மோசமடைகின்றதோ அந்த அளவிற்கு மன பாதிப்புக்களையும் அவலங்களையும் தந்தே தான் தீரும் .தன்   தேவைகளுக்கு  ஏற்ப செல்வங்களையும் சந்தோசங்களையும் வளர்த்துக் கொள்ளும் மனிதன் மட்டுமே இப் புவியில் மகிழ்ச்சியானதொரு வாழ்வை அனுபவிக்க முடியும். பணம் மட்டுமே வாழ்க்கை என்று கருதுவோர்களின் இல்லங்களில் சந்தோசம் நிலைப்பதில்லை மாறாக சங்கடங்கள் தான் நிலைத்திருக்கின்றது .அதிலும் தன் தாய் தந்தையைப் பேணிக் காக்க மறந்தவர்கள் உடன் பிறந்த சொந்தங்களை உதறித் தள்ளியவர்கள் ,சொத்துக்காக அன்றாடம் சண்டையிட்டு பிரிந்து (வாழ்ந்தவர்கள் )வாழ்பவர்கள் இவர்கள் ஒரு போதும் தம் வாழ்நாளில் உண்மையான சந்தோசத்தை அனுபவித்திருக்க முடியாது அனுபவிக்கவும் முடியாது .

உண்மையான சந்தோசம் என்பது நல்ல  உணர்வுகளில் தான் தங்கி உள்ளது இதை எம்மில் எத்தனை பேர் தான் அறிந்து வைத்துள்ளோம் ! கட்டுப்பாடற்ற மனத்தில் எழும் ஆசைகளினாலும் ஆனந்தத்தினாலும் தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்பவர்கள் தங்களை அறியாமலேயே   அந்த நல்ல உணர்வுகளைக்  கெடுத்துக் கொள்கின்றார்கள் இதனால் உறவுகளை விட்டுப் பிரிந்தும்  நீண்ட காலம் பகைவர்கள்  போல் வாழ்ந்தும் மடிகிறார்கள் இந்த வாழ்வினூடாக நாம் பெறக்கூடிய சந்தோசம் தான் என்ன ?..உறவுகள் கூடி இருக்கும் போது கிட்டும் மகிழ்வினை நாம் எப்போதும் தனிமையில் பெற்று விட முடியுமா ?...காணிச் சண்டையும் வேலிச் சண்டையும் களம் இறங்கிய காலங்களில் சொந்த மாமன் ,சித்தப்பன் ,பெரியப்பன் அவர் தம் குடுப்ப உறவினர்கள் அனைவரையும் வளரும் இளம் சந்தியினரான நாம் எவ்வறு அறிந்து கொண்டோம் பகைவர்களாகத் தானே ?..

இன்று சொந்த நாடும் இல்லை வீடும் இல்லை சுடு காட்டினில் தான் வாழுகின்றோம் இதற்கு முன்னர் எப்போதாவது நாம் இது போன்றதொரு சூழ்நிலை வரும் என்பதை அறிந்திருந்தோமா ?..அறியாத காலங்களில் அநியாயமாக எங்கள் உடன் பிறந்த இரத்த உறவுகளின் சாவுக்குக் கூட நாம் காரணமாக இருந்திருக்கின்றோம்   என்பதை இப்போது கூட உணர மறுக்கும் சொந்தங்களை  நாம் என்னவென்று சொல்வது ?...நம்பிக்கையின் பெயரால் அக்காலத்திலெல்லாம் பலரது சொத்துக்களுக்கு உரிமை கோரும் ஆவனங்களை முறைப்படி எம் முன்னோர்கள் பதிவிட்டுக் கொடுக்காத பட்சத்தில் இன்று நாடு இருக்கும் நிலையில் அந்த சொத்துக்களுக்கு ஆண் வாரிசுகள் உரிமை  கோருவதும் இதற்காக மீண்டும் மீண்டும் சண்டையிடுவதும் நியாயமானதொரு செயலா ?..தன் வாரிசுகள் பண மலையில் படுத்து உறங்குகையிலும் உடன் பிறந்த சகோதரியின் சொத்தின் மேல் அதீத நாட்டம் கொண்டு தொடர்ந்தும் போராடும் இவர்களைப் போன்ற மனிதர்கள் வாழும் பூமியில் நின்மதிக்கு வழி கிட்டுமா?....

பிறக்கும் போதே  ஒரு தாயின் வயிற்றில் கூடிப் பிறந்த சொந்தங்களே இவ்வாறு மனிதாபிமானம் அற்று நடக்கும் போது பிறரது செயற்பாடுகளில் நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் ?..தனக்கென ஒரு சொந்த நாடு இருந்தும் அகதியாக வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் இப்படியும் ஒரு போராட்டமா !! இவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் ,தம்பி ,அக்கா தங்கை உறவுகளெல்லாம் இனி வரும் காலங்களில் வெறும் உறவு முறையாகத் தான் இருக்க முடியுமா ! ?.......கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதே அற்றுப் போன புரிந்துணர்வுகளும் அன்பும் கண் காணாத தேசத்தில் பிரிந்து வாழும் போது எவ்வாறு தொடர்ந்திருக்கும் ?..!! கேள்விக் குறியாக நிற்கும் எம் மக்களின் வாழ்வில் இழந்த சந்தோசங்களை ஒற்றுமையைக் கட்டி எழுப்ப என்றேனும் ஒரு நாள் அந்த நல்ல காலம் உலகில் தோன்றாதா ?...விஷக் கிருமிகளுக்குப் பயந்து தான் வாழ்ந்த பூமியை விட்டுக் கொடுக்கும் இந்தக் கொடுமையான நிகழ்வினைக்  கண்டு பதைக்கும் மனங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா ?...பல லட்சம் உயிர்களைப் பலி கொண்ட  ஆநீதிக்கு முற்றுப் புள்ளி கிட்டும் வரைக்கும் இந்த ஓலமும் ஓயப் போவதில்லை என்பது தான் உண்மையோ !!............
                                  

Tuesday, March 11, 2014

விடை தேடும் கண்கள் ..எந்தப் பிறப்பில எந்தப் பாவத்தைச் செய்தமோ ! மனுஷன் இந்தக் குளிருக்குள்ள வாழவா முடியும்? ! நாளுக்கு நாள் இழவு வீட்டுக்குப் போறதும் இரங்கல் பா பாடுறதுமே வேலையாப் போச்சு .சுன்னாகச் சந்தையில நாலு மரக்கறிய வித்துப் போட்டு வாற வருமானத்தில வாய்கரிசியப் போட்டுக்கொண்டு இருந்தப்போ இருந்த நின்மதி கூட இப்ப இல்லாம போச்சு இவளுக்கு நான் அப்பவே சொன்னான் வெளி நாடும் வேணாம் ஒரு கத்தரிக்காயும் வேணாம் எண்டு உயிருக்குப் பயந்து இங்க ஓடி வந்தாள் இப்ப என்ன ஆச்சு மாமா எதுக்கு இந்தப் புலம்பல் புலம்புறீங்க ?....சந்தானம் உனக்குச் சொன்னால் எதுவும் புரியாது நீயும் உன்ர அத்தையும்  ஒரே மாதிரித்தான் விடு கதையை ...

                அது சரி மாமா நானும் என்ர அத்தையும்   ஒரே மாதிரித்தான் இப்ப அதுவா பிரச்சனை ?...உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொன்னால் தானே தெரியும் அத விட்டிற்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறதால என்ன லாபம் ?

அப்படிக் கேளு ! இப்ப லாப நட்டம் தானே பிரச்சனையே .எல்லாப் பிரச்சனையும் சொல்லி முடிக்கிறதுக்கு முன்னால எனக்கு வயசாகிப் போயிரும் இருந்தாலும் உன்னட்ட ஒரே ஒரு கேள்வி தான் நான் இப்ப கேக்கப் போகிறன் அந்த ஒரு கேள்விக்கு நீ முறையா பதில் சொல்லீற்றா போதும் இந்தப் புலம்புறது ,கத்துறது ,கதறுறது  எல்லாம் ஒரேயடியாக  முடிஞ்சிரும் .

சரி கேளுங்க அப்புடி என்ன தான் கேக்கப் போறீங்க கேளுங்க ?...அவசரப் படாத சந்தானம் கேக்க வந்தத இப்ப கேக்காமலா போகப் போறன் ?...நீ உன்ர மனசில என்ன நினைச்சு இருக்கிற இந்த நாடு எங்களுக்கு நிரந்தரம் எண்டு நினைக்கிறியா ?...இப்புடி சட்டெண்டு கேட்டால் எப்புடி பதில் சொல்லுறது மாமா ?...ஒரு வேளை இந்த நாடு எங்களுக்கு நிரந்தரமாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் .பிள்ளையள் இந்த நாட்டில படிக்கிறதால இனி அவையின்ர எதிர் காலம் இங்க தானே இருக்கும் .

ஓ ...அது தான் உன்ர பிள்ளையளுக்குத் தமிழ் தெரிஞ்சால் என்ன தெரியாவிட்டால்  என்ன என்று விட்டிற்றீரோ ???..!! ஒன்று மட்டும் தெரிஞ்சு கொள் சந்தானம் என்ன தான் வெளி நாட்டுக் காரன் இந்த நாட்டில எங்களையும் மனுசரா மதிச்சு வாழ விட்டாலும் இந்த நாடோ இந்த நாட்டு மொழியோ எங்களுடைய அடையாளம் கிடையாது .காலப் போக்கில இந்த நாட்டில ஒரு பிரச்சனை என்று வந்தாலே போதும் இனத் துவேசம் சும்மா விடாது உன்ர பிள்ளைகளையோ அல்லது உன்ர பேரப் பிள்ளைகளையோ ஓட ஓட விரட்டும் காலமும் வரும் அந்த நேரத்தில தான் எல்லாருக்கும் ஒரு விஷயம் விளங்கும் .என்ன தான் ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும் தன் நாடு தன் மக்கள் தன் தாய் மொழி எவ்வளவு முக்கியம் எண்டு .

அதுக்காக எல்லாத் தமிழனும் உன்ன மாதிரியே இருக்கினம் எண்டு நினைக்காத வேலைக்குப் போறதோட கொஞ்சம் வெளியிலையும் வந்து பார் எங்கட நாட்டு மக்கள் தன் இனத்தினுடைய விடுதலைக்காகவும் கலை கலாச்சாரத்தைப் பேணிப் பாது காப்பதர்க்காவும் எவ்வளவு போராடுகின்றார்கள் என்று ! என்னதான் போத்து மூடிக் கொண்டு போனாலும் மச்சுப் போற எலும்பு மச்சுத் தான் போகும் வெள்ளைக் காரனுக்கு இல்ல எங்களுக்கு .நீயும் உன்ர காலில போட்டிருக்கிற சப்பாத்தும் மலிவு விலை உடுப்பும் இப்புடியே குடும்பப் பொறுப்பில இருந்து விடு படும் என்றால் குறைஞ்சது 55 வயசுக்கெண்டாலும் இருப்ப அது எங்க நடக்கப் போகுது ?....இரவு பகலா பட்டை அடிச்சு வாற காச வீட்டு வாடகைக்கும் வருமான வரிக்கும் ஆசுப்பத்திரிக்கும் குடுத்திற்று விட்டத்தைப் பார்க்கவே சரியாய் இருக்கும் இதில இந்த நாடே கெதி எண்டு கிடக்கவா முடியும் ?...

நம்ம நாடு விடுதலை அடைய வேணும் எங்களுடைய சொந்த பந்தங்கள் எல்லாரும் ஒண்ணா வாழ வேணும் எண்டு நின அதையே பிள்ளையளுக்கும் சொல்லி வளத்துக் கொண்டு வா .எனக்கு அடுத்தாற் போல என்னுடைய பரம்பரைய வளத்துக் கொண்டு போறதும் உன்னுடைய கடமை தான் .இந்த நாட்டில இருந்து கொண்டே எங்களுடைய முகவரிகளை நீயில்ல எந்தத் தமிழனும் துலைக்க நினைக்கிறது பாவம் இதனால ஒரு இனமே அழிந்து போகும் தமிழனது இனம் அழியாமல் இருக்க வேணும் என்றால் முதலில் உன் வீட்டில தமிழை மட்டும் பேசு ஆகக் குறைஞ்சது பேச்சுத் தமிழாவது கொஞ்சம் வாழட்டும்  .

பெண்ணைக் கொடுத்ததால மட்டும் இல்ல நான் உனக்கு மாமன் நீ என் சகோதரியின் வயிற்றில்  பிறந்தவன் உன்னைத்  தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்தவன் நான் என் போல மாமனும் சித்தப்பனும் பாட்டன் பாட்டியும் நீ பெத்த வாரிசுகளுக்கும் தேவை சந்தானம் நான் பேசப் பேச இவ்வளவு நேரமும் மௌனமாக  கேட்டுக் கொண்டு நின்றாயே அது தான்ரா  நீ எனக்கு காட்டிய மரியாதை அன்பு மூத்தோரை மதிக்கும் பண்பு இதெல்லாம் உன்னுடைய பிள்ளைகளுக்கும் தெரிஞ்சிருக்க வேணும் .உறவு முறையே சொல்லத் தெரியாமல் ஆளையாள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டே போனால் காலப் போக்கில கூடப் பிறந்த சகோதரத்தின் பிள்ளைகளும் அன்னியர் போலத் தான் தெரியும் .அதுனால ஒரே வேலையும் வீடும் தான் வாழ்க்கை என்று இல்லாமல் நீயும் சொந்தம் பந்தம் என்று உறவாடி வா பிள்ளையளுக்கும் அந்த உறவு முறைகளைச் சொல்லி வள சந்தானம் வேற்று மொழியில படிச்சாலும் தாய் மொழியைச் சொல்லிக் குடுய்யா எங்க பரம்பர ஆண்ட பூமியில இந்த வித்துக்கள் விருட்சமா வளர வேணும் வளர வேணும் வளர ....

ஆடிக்கொண்டே இருந்த கதிரை சட்டென நிக்க அருகில் இருந்த தண்ணீர்ச் செம்பு கவுண்டு விழவும் மலைத்துப் போய் நின்ற சந்தானம் ஓடி வந்து பார்க்கும் போது  சிரித்த முகத்துடன் எதையோ சாதித்து விட்டுச் செல்லும் மகாத்மாவைப் போல் விடை கொடுத்தார் அந்தத் தேசப் பற்றாளன் அவரின் எண்ணங்கள் சிந்தனைகள் தானே நாம் அவசியம் பின்பற்ற வேண்டியவை இதை உணர்ந்த சந்தானம் போன்று இன்னும் எத்தனை எத்தனை உறவுகள் இங்கே வியப்பின் உச்சத்தில் அலைகின்றது !!...

பி .கு :இது ஒரு கற்பனைக் கதையே 

Wednesday, November 20, 2013

கார்த்திகைப் பூக்களின் கனவும் நீதானே

நாற்று நடும் கைகள் எங்கே ?..
நல்ல தமிழ்ப் புலமை எங்கே ?...
பூட்டி வைத்த அறையினுள்ளே 
புதைந்து கிடக்கும் சுதந்திரமே !!!!...

ஒற்றையடிப் பாதையிலே 
ஒருவர் பின்னல் ஒருவர் செல்லக் 
கற்றுத் தந்த பாடமெல்லாம் 
களமிறங்கப் பார்க்குதுன்னால் 

வட்டமிடும் பருந்திற்கும்  
வழி காட்டும் நரிகளுக்கும் 
அச்சமின்றி நிமிர்ந்த தலை 
அடங்கிடுமோ எந்நாளும் ?...

பொட்டு வைத்து வழியனுப்பும் 
பொங்கு தமிழ்க் குலத்தின் நிழல் 
கட்டுப் பாட்டை மீறும் முன்னால் 
காத்து விடு சுதந்திரமே ....

பட்டுப் போன மரத்தடியில் 
பல மரங்கள் தழைத்திருக்கும் 
அவைக்கும் உச்ச நீதி வழங்கிடவே 
ஓடி வா நீ சுதந்திரமே .....  ............                                                    

Friday, August 2, 2013

அன்பு உள்ளம் உங்களை வரவேற்கின்றது

                                                                
                                                                   

தாயைப் போல அன்பு செலுத்தக்கூடிய நல்ல இதயங்களைத் தேடித் தேடி  ஒரு சிறு பறவையின் மன வெளிகள் மீண்டும் இங்கே திறந்து வைக்கப் படுகிறது. அன்பு தான் வாழ்வின் இன்ப ஊற்று இதை அறியாதவர்கள் வாழ்வே வெறும் கூற்று .இன்று போய் நாளையும் வருவேன் என்று கூறி எங்கோ பரந்து விரிந்த தேசத்தில் ,ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகள் உங்களுடன் உறவாடி மகிழக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக ஏங்கித் தவிக்கும் இந்தப் பிஞ்சு மனத்தையும்  கொஞ்சம் மகிழ்விக்க வாருங்கள் உறவுகளே உங்கள் வரவுக்காகக் காத்திருக்கின்றேன் !!

பொன்னும் பொருளும் கல்வியும் புகழின் உச்சிக்கே எடுத்துச் சென்றாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்றே இதயம் கேட்பது என்னமோ அன்பைத்தான் .ஆதலால் சிரித்துப் பேசுவோம் சிந்தை மகிழ்ந்திட கதைகள் சொலுவோம் கவலைகள் மறந்திட .இனி இருக்கும் காலம் முழுவதும் இவளும் உங்கள் சொந்தமென்றே அரவணைத்துச் செல்லுங்கள் .இன்று அறிமுகமானவள் என்றோ ஒரு நாள் உங்களையும்  அறிமுகப் படுத்துவாள் அன்பு உள்ளம் நினைத்தால் எதுவும் இங்கே சாத்தியமாகும் :)

                           உரை முடிந்தது விருந்துண்ணலாம் வாருங்கள்


                                                                   


                                     
                                                                    
                                        கதை ,கவிதை ,அறிமுகம் ,அனுபவம் 
                                                            
தொடர்ந்தும் வாருங்கள் விருந்து பிடித்திருந்தால் என் மனமும் உங்கள் மனமும் இதனால் மகிழ்ந்திருக்கும் .இன்றைய வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் சந்திப்போம் .

                                                                            நன்றி 
                                                                  
                                                                    
                                                                            

Tuesday, October 9, 2012

மின்னுவதெல்லாம் பொன் எனத் தகுமா....


அற நெறிகளைத் தன் அறிவின் ஆற்றல் கொண்டு  ஒருவர் கற்றுக் கொண்டதனாலோ அல்லது அதையே பிறருக்கும் போதிக்கும்  வல்லமை பெற்றுக் கொண்டதனாலோ மட்டும் அவர்களை நாம் புனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது .காரணம் ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாக்கக் கூட இருக்கலாம் .ஆனால் மனித உணர்வுகளை மதிக்கத்தக்க நேசிக்கத் தக்க பண்பு அவனிடம் என்றும் குறையாமல் இருத்தல்  வேண்டும் .இவ்வாறு சத்தியம் தவறாத பிறருக்கு உதவும் நற் குணங்கள் நிறைந்த மனிதர்களே நாம் போற்றப்பட வேண்டிய புனிதர்கள் .அசலும் ,நகலும் போட்டியிடும் இவ் உலகில் நாம் முதலில் உணர வேண்டிய விடயம் இதன் உண்மைத் தன்மை ஒன்றினைத்தான் .நாம் பின் தொடரும் பாதைகள் எதுவாக இருப்பினும் எம் பயணம் தொடர்வதற்கு முன்பே சற்றேனும் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும் .தெரிந்துகொள்ள வேண்டும் .செல்லும் இடம் எதுவென அறியாமலே மந்தைகள் போல் எம் குணம் இருக்குமானால் வரும் இன்னல்களுக்கும் நாம் இடமளித்துத்தான் ஆக வேண்டும் .

                       போலிகளைக் கண்டு எமாருதலும் அந்த ஏமாற்ற உணர்வுகளோடு பின் நிஜங்களைக் கண்டு மிரழுவதும் மனித பண்பிற்கு ஒப்பற்ற செயலாகும்  எதையும் பகுத்தறிந்து கொள்ளும் பக்குவம் எமக்கு எப்போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இருத்தல்  வேண்டும் .இந்தப் பகுத்தறியும் தன்மை அற்றுப் போகும் இடத்தில்தான் வீண் விவாதங்கள் வலுப்பெற்றுச் செல்லும் .நான் என்ற ஆணவமும்  இந்த இடத்தில்தான் தலை தூக்கும் .இதனால் மனிதன் தன் சுய சிந்தனையை இழக்க நேரிடும் .அவ்வாறு சுய சிந்தனை அற்றுப் பேச்சுத் தொடர்ந்தால்  விளைவுகள் எப்போதுமே விபரீதமாகவேதான் முடியும் ஆதலால் எந்த ஒரு விசயத்தைப் பற்றியும்  நாம் பேசுவதற்கு முன்னாலும் அதன் உண்மைத் தன்மையை பூரணமாக அறிந்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் .
                        
                    நாம் ஏதேனும் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி தரக் குறைவாக பேசி விட்டுச் செல்வது சர்வ சாதாரணமாக முடிந்த விசயம் ஆனால் இதனால் வரும் இழப்புகளை மட்டும் அத்தனை சுலபமாக பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது .எனவே பேசும் பேச்சில் தெளிவு வேண்டும் .எமக்கு சம்மந்தம் அற்ற விடயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைப்பதைத் தவிர்த்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் .பிறரை இழிவு படுத்தும் வகையில் உள்ள எம் பேச்சுத் திறனை பிறர் கண்டு அருவருக்கும் நிலை வந்து விட்டால் பின் வாழ்நாள் முழுவதும் உங்களை அறிந்தவர்களுக்கும் உங்களுடன் கூடிப் பழகினால் வீண் குழப்பம் வரும் என்ற ஒரு பயம் தன்னை அறியாமலே வந்து விடும் .இதானால் நீங்கள் ஒரு சமூக ஒற்றுமைப்பாடு  அற்றவர் என்ற கணிப்பீட்டுக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள் .உங்களால் உங்கள் குழந்தைகள் அவர்களின் எதிர்கால வாழ்க்கை எல்லாமே பாதிக்கப் படும் .எனவே இனிமையாகப் பேசி இன்பமான வாழ் நாளை உறவுகளோடு சேர்ந்து கலந்து வாழ வழி அறிந்து வாழ்வோம் அன்பு நெஞ்சங்களே !....
                                                                           
                                                 வாய்மை எனப்படுவது யாதெனில் 
                                                யாதொன்றும் தீமை இலாத சொலல் !!!....
                                

Thursday, September 27, 2012

செய்வன திருந்தச் செய் !.....

சுத்தம் சுகம் தரும் .அதுபோல் வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும்  மிகுந்த அவதானம் இருக்க வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு முன் எங்கள் சிந்தனை ஓர் நிலையான இடத்தில் நிற்க வேண்டும் புகழுக்காகவோ அல்லது பிறரை இழிவு படுத்த வேண்டும் என்ற தவறான நோக்கங்களுடனோ நாம் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. காரணம் எமது வாழ்க்கை என்பது ஒரு நல்ல சமூகத்துடன் பின்னிப் பிணைந்து இருக்க வேண்டும் எனில் பிறர் மதிக்கத் தக்க வகையில் எம் பண்பு இருக்க வேண்டும் எந்த ஒரு மனிதனும் ஒருவருடன் பழக நினைக்கும் போதே அவரது பண்பு குறித்த கேள்விக்குறிகள் அவசியம் எழும். எழ வேண்டும். அவ்வாறு இல்லையேல் காலப்போக்கில் இவர்கள்தான் எம்முடன் இத்தனை காலமும் நட்புப்  பாராட்டி வந்தவர்கள்  இவர்களது செயல் நாம் எதிர் பார்க்கும் இடத்தில் இல்லை என்று தெரிய வந்தால் அதை விடவும் துன்பம் வேறு இல்லை எனலாம். நல்லவர்களாக வாழ்பவர்கள் கிடைத்தல் என்பது நாம் செய்த புண்ணியம். அதே போன்று தீய ஒழுக்கம் உடையவர்களின் நட்பு கிடைத்துவிட்டால் காலனும்  நம் வருகைக்காகக் காத்திருக்க  வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்டத்தில் நாமே காலனை அழைக்க நேரிடும் அதனிலும் இன்றைய கால கட்டங்களில் மனிதன் எதைச் சிந்திக்கின்றான் அவன் மனம் எம்மிடம் இருந்து எதை எதிர் பார்க்கின்றது ,அடுத்த கட்டமாக அவன் எமக்கு என்ன செய்வான் என்பனவற்றைக் கூட எம்மால் அறிய முடிவதில்லை.  அவ்வளவு தூரம் நம்பிக்கைத் துரோகத்தில் மனித இனம் மிக மிக முன்னேறி விட்டதென்றே கருத முடிகிறது .இதனால்தான் எங்கு பார்த்தாலும் சினிமாவிலோ அல்லது தொலைக் காட்சி நாடகங்களிலோ அல்லது பிற செய்தித் தளங்களிலோ வரும் செய்திகள் தகவல்கள் எல்லாமே பார்த்து எம்மால் யீரணிக்க முடிவதில்லை .ஏன் இவைகள்தான் இன்று எம் அன்றாட வாழ்வில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன !....
      
மகிழ்ச்சிப் பூக்கள் பூக்க வேண்டும் என்றே மனிதன் பிற உறவுகளைத் தேடி அடைகின்றான்  அங்கே கண்ணீர்ப்  பூக்களைக்  கலக்க விடாமல் இருக்க எமக்கு மிகுந்த கவனம் தேவை என்பதில் நாமேதான் உறுதியாக இருக்க வேண்டும் பிறர்    பேச்சைக் கேட்டு அவர்களை நல்லவர்கள் என்ற முடிவுக்கு நாம் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது .எமது ஒவ்வொரு செயலுக்கும் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விளக்கம் கேட்பதோ அல்லது விளங்கப்படுத்துவதோ கூடவே கூடாது .சில சமயம் உங்கள் நண்பர்கள் மீது உங்களுக்கு சந்தேகம் எழலாம்  அவ்வாறன சமயங்களில் பொறுமை காப்பதோ அல்லது மறை முகமாக மன்னித்து விடுவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள் .காரணம் நட்புக்கிடையில் ஒளிவு மறவு தேவை இல்லை .மிகப் பெரிய குற்றங்கள் செய்தவர்களை அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் செயலை அவதானித்து மெதுவாக நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் மற்றபடி சிறு சிறு தவறுகளை உடனுக்குடன் தெளிவு படுத்தி வாழப் பழகுங்கள் .அதை விட்டு விட்டு இவ்வளவு காலமும் நண்பர்களாக  வாழ்ந்ததை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் இருந்து விடாதீர்கள் .  இந்த விட்டுக்கொடுப்புகளை தவறாக ஒருவர் புரிந்துகொண்டால்  இதை விடவும் பெரும் தவறுகளை செய்து விட்டு அவர்களும் ஒரு நேரத்தில் உங்களுக்கு துரோகிகளாக மாறலாம் .எதற்கும் முன்னெச்சரிக்கையாக உங்கள் நண்பர்களின்  விபரங்களை உங்கள் வீடில் உள்ள பெரியவர்களுடன் ஓர் அறிமுகம் செய்து வைத்துக்கொள்ளுங்கள் .இதனால் உங்கள் நட்பு ஆரோக்கியமானதா, அவர்கள் நல்லவர்கள்தானா,  யாருடன் நாம் எப்படிப் பழக வேண்டும் என்ற பெரியவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் கிட்டும். அவை உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .   ஒளிவு மறைவு அற்ற நட்பே உகந்தது இக் காலத்திற்கு என அனைவரும் உணர வேண்டும். நண்பர்களின் தொகைகளை விடவும் நட்புப் புனிதமானது அதை மதிக்கும் ஒருவரே எமக்கு நண்பராக வர வேண்டும் என்ற   குறிக்கோள்  இங்கு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் இன்றைய என் ஆக்கத்தினை நிறைவு செய்கின்றேன் .மிக்க நன்றி உறவுகளே வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும்  .   

                                                                                     

happy birthday google!!!!!!!...........

கணனித்  திரையில் உன் நாமம் 
அதைக் காணும்போதே மனம் மகிழும் 
இந்தத் தரணி எல்லாம் உன் சேவை 
அதைத் தந்தே எம்மை நீ வளர்த்தாயே  !...

மலரும் நினைவுகள் எல்லாமே 
உன் மன்றம் வந்து நினைவாகும் 
புகழின் உச்சியில் நாம் ஏற 
ஒவ்வொரு பொழுதும் உழைக்கும் நீ வாழ்க !.....

கூகுள் என்ற பெயர் சொன்னால் 
குழந்தை கூட தவண்டு வரும் !!!!.
உன் சேவை கண்டு வியந்தோம் நாம் 
எந்நாளும் நீ இங்கு வளம் பெற வேண்டும் ........

ஆலம் விழுது போல் நாமும் உன்னை 
அண்டிப் பிளைத்தே வாழ்கின்றோம் 
நீயும் தாயின் தொப்பிள் கொடிபோலே 
எம் தமிழை என்றும்  வழர்க்கின்றாய் !!!!..... 

காலம் உள்ள காலம் வரை எம் 
கண்ணாய் இருக்க நீ வேண்டும் 
நீலக் கடலில் விளைந்த முத்தே 
நீ இங்கு வாழ்க்க வாழ்க பல்லாண்டு !.....

                                             அன்பு உள்ளத்தின் அகத்தில் இருந்து