Friday, March 28, 2014

இப்படியும் ஒரு வெறியா !

                                                                         


எண்ணிக் கடக்கும்  வாழ்நாளில் இன்னும் எத்தனை காலங்கள் தான் வாழப் போகின்றோமோ தெரியவில்லை அதற்குள் மனிதன் மனிதனாக வாழும் போது தான் தன்னையும்   பிறரையும் உணரும் வாய்ப்பினைப் பெறுகின்றான் தன்னை உணர்ந்தவனுக்கே
இத் தரணியில் மதிப்பும் மரியாதையும் உயர்கின்றது .பட்டப் படிப்புப் படித்து முடிப்பதனாலோ அல்லது பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொள்வதனாலோ அவன் மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது .நாம் கற்றுக் கொண்ட பாடம் எதுவோ அதையே கடைப்பிடிக்கும் தன்மை முதலில் எங்களுக்குள் இருக்க வேண்டும் .பணம் படைத்தவனுக்கோ  பிறருக்கும் உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் தவிர தான் பெற்ற அறிவையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டு பிறரை அழிப்பதற்கும் இம்சிப்பதற்கும் முயற்சிப்பவனை ஒரு போதும் மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியாது .

பண வெறி என்பது பொதுவாக மனிதர்களுக்குள்  உள்ள குணாதிசயங்களில்  ஒன்றாகும்  .இது எந்த அளவிற்கு மோசமடைகின்றதோ அந்த அளவிற்கு மன பாதிப்புக்களையும் அவலங்களையும் தந்தே தான் தீரும் .தன்   தேவைகளுக்கு  ஏற்ப செல்வங்களையும் சந்தோசங்களையும் வளர்த்துக் கொள்ளும் மனிதன் மட்டுமே இப் புவியில் மகிழ்ச்சியானதொரு வாழ்வை அனுபவிக்க முடியும். பணம் மட்டுமே வாழ்க்கை என்று கருதுவோர்களின் இல்லங்களில் சந்தோசம் நிலைப்பதில்லை மாறாக சங்கடங்கள் தான் நிலைத்திருக்கின்றது .அதிலும் தன் தாய் தந்தையைப் பேணிக் காக்க மறந்தவர்கள் உடன் பிறந்த சொந்தங்களை உதறித் தள்ளியவர்கள் ,சொத்துக்காக அன்றாடம் சண்டையிட்டு பிரிந்து (வாழ்ந்தவர்கள் )வாழ்பவர்கள் இவர்கள் ஒரு போதும் தம் வாழ்நாளில் உண்மையான சந்தோசத்தை அனுபவித்திருக்க முடியாது அனுபவிக்கவும் முடியாது .

உண்மையான சந்தோசம் என்பது நல்ல  உணர்வுகளில் தான் தங்கி உள்ளது இதை எம்மில் எத்தனை பேர் தான் அறிந்து வைத்துள்ளோம் ! கட்டுப்பாடற்ற மனத்தில் எழும் ஆசைகளினாலும் ஆனந்தத்தினாலும் தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்பவர்கள் தங்களை அறியாமலேயே   அந்த நல்ல உணர்வுகளைக்  கெடுத்துக் கொள்கின்றார்கள் இதனால் உறவுகளை விட்டுப் பிரிந்தும்  நீண்ட காலம் பகைவர்கள்  போல் வாழ்ந்தும் மடிகிறார்கள் இந்த வாழ்வினூடாக நாம் பெறக்கூடிய சந்தோசம் தான் என்ன ?..உறவுகள் கூடி இருக்கும் போது கிட்டும் மகிழ்வினை நாம் எப்போதும் தனிமையில் பெற்று விட முடியுமா ?...காணிச் சண்டையும் வேலிச் சண்டையும் களம் இறங்கிய காலங்களில் சொந்த மாமன் ,சித்தப்பன் ,பெரியப்பன் அவர் தம் குடுப்ப உறவினர்கள் அனைவரையும் வளரும் இளம் சந்தியினரான நாம் எவ்வறு அறிந்து கொண்டோம் பகைவர்களாகத் தானே ?..

இன்று சொந்த நாடும் இல்லை வீடும் இல்லை சுடு காட்டினில் தான் வாழுகின்றோம் இதற்கு முன்னர் எப்போதாவது நாம் இது போன்றதொரு சூழ்நிலை வரும் என்பதை அறிந்திருந்தோமா ?..அறியாத காலங்களில் அநியாயமாக எங்கள் உடன் பிறந்த இரத்த உறவுகளின் சாவுக்குக் கூட நாம் காரணமாக இருந்திருக்கின்றோம்   என்பதை இப்போது கூட உணர மறுக்கும் சொந்தங்களை  நாம் என்னவென்று சொல்வது ?...நம்பிக்கையின் பெயரால் அக்காலத்திலெல்லாம் பலரது சொத்துக்களுக்கு உரிமை கோரும் ஆவனங்களை முறைப்படி எம் முன்னோர்கள் பதிவிட்டுக் கொடுக்காத பட்சத்தில் இன்று நாடு இருக்கும் நிலையில் அந்த சொத்துக்களுக்கு ஆண் வாரிசுகள் உரிமை  கோருவதும் இதற்காக மீண்டும் மீண்டும் சண்டையிடுவதும் நியாயமானதொரு செயலா ?..தன் வாரிசுகள் பண மலையில் படுத்து உறங்குகையிலும் உடன் பிறந்த சகோதரியின் சொத்தின் மேல் அதீத நாட்டம் கொண்டு தொடர்ந்தும் போராடும் இவர்களைப் போன்ற மனிதர்கள் வாழும் பூமியில் நின்மதிக்கு வழி கிட்டுமா?....

பிறக்கும் போதே  ஒரு தாயின் வயிற்றில் கூடிப் பிறந்த சொந்தங்களே இவ்வாறு மனிதாபிமானம் அற்று நடக்கும் போது பிறரது செயற்பாடுகளில் நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் ?..தனக்கென ஒரு சொந்த நாடு இருந்தும் அகதியாக வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் இப்படியும் ஒரு போராட்டமா !! இவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் ,தம்பி ,அக்கா தங்கை உறவுகளெல்லாம் இனி வரும் காலங்களில் வெறும் உறவு முறையாகத் தான் இருக்க முடியுமா ! ?.......கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதே அற்றுப் போன புரிந்துணர்வுகளும் அன்பும் கண் காணாத தேசத்தில் பிரிந்து வாழும் போது எவ்வாறு தொடர்ந்திருக்கும் ?..!! கேள்விக் குறியாக நிற்கும் எம் மக்களின் வாழ்வில் இழந்த சந்தோசங்களை ஒற்றுமையைக் கட்டி எழுப்ப என்றேனும் ஒரு நாள் அந்த நல்ல காலம் உலகில் தோன்றாதா ?...விஷக் கிருமிகளுக்குப் பயந்து தான் வாழ்ந்த பூமியை விட்டுக் கொடுக்கும் இந்தக் கொடுமையான நிகழ்வினைக்  கண்டு பதைக்கும் மனங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா ?...பல லட்சம் உயிர்களைப் பலி கொண்ட  ஆநீதிக்கு முற்றுப் புள்ளி கிட்டும் வரைக்கும் இந்த ஓலமும் ஓயப் போவதில்லை என்பது தான் உண்மையோ !!............
                                  

2 comments:

  1. வேறு வழியில்லை... சிலருக்கு சொன்னால் புரியும்... சிலருக்கு பட்டால் தான் புரியும்...

    ReplyDelete
  2. நிச்சயம் விடிவு பிறக்கும் சகோதரியாரே

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .