Tuesday, March 11, 2014

விடை தேடும் கண்கள் ..எந்தப் பிறப்பில எந்தப் பாவத்தைச் செய்தமோ ! மனுஷன் இந்தக் குளிருக்குள்ள வாழவா முடியும்? ! நாளுக்கு நாள் இழவு வீட்டுக்குப் போறதும் இரங்கல் பா பாடுறதுமே வேலையாப் போச்சு .சுன்னாகச் சந்தையில நாலு மரக்கறிய வித்துப் போட்டு வாற வருமானத்தில வாய்கரிசியப் போட்டுக்கொண்டு இருந்தப்போ இருந்த நின்மதி கூட இப்ப இல்லாம போச்சு
இவளுக்கு நான் அப்பவே சொன்னான் வெளி நாடும் வேணாம் ஒரு கத்தரிக்காயும் வேணாம் எண்டு உயிருக்குப் பயந்து இங்க ஓடி வந்தாள் இப்ப என்ன ஆச்சு மாமா எதுக்கு இந்தப் புலம்பல் புலம்புறீங்க ?....சந்தானம் உனக்குச் சொன்னால் எதுவும் புரியாது நீயும் உன்ர அத்தையும்  ஒரே மாதிரித்தான் விடு கதையை ...

                அது சரி மாமா நானும் என்ர அத்தையும்   ஒரே மாதிரித்தான் இப்ப அதுவா பிரச்சனை ?...உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொன்னால் தானே தெரியும் அத விட்டிற்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறதால என்ன லாபம் ?

அப்படிக் கேளு ! இப்ப லாப நட்டம் தானே பிரச்சனையே .எல்லாப் பிரச்சனையும் சொல்லி முடிக்கிறதுக்கு முன்னால எனக்கு வயசாகிப் போயிரும் இருந்தாலும் உன்னட்ட ஒரே ஒரு கேள்வி தான் நான் இப்ப கேக்கப் போகிறன் அந்த ஒரு கேள்விக்கு நீ முறையா பதில் சொல்லீற்றா போதும் இந்தப் புலம்புறது ,கத்துறது ,கதறுறது  எல்லாம் ஒரேயடியாக  முடிஞ்சிரும் .

சரி கேளுங்க அப்புடி என்ன தான் கேக்கப் போறீங்க கேளுங்க ?...அவசரப் படாத சந்தானம் கேக்க வந்தத இப்ப கேக்காமலா போகப் போறன் ?...நீ உன்ர மனசில என்ன நினைச்சு இருக்கிற இந்த நாடு எங்களுக்கு நிரந்தரம் எண்டு நினைக்கிறியா ?...இப்புடி சட்டெண்டு கேட்டால் எப்புடி பதில் சொல்லுறது மாமா ?...ஒரு வேளை இந்த நாடு எங்களுக்கு நிரந்தரமாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் .பிள்ளையள் இந்த நாட்டில படிக்கிறதால இனி அவையின்ர எதிர் காலம் இங்க தானே இருக்கும் .

ஓ ...அது தான் உன்ர பிள்ளையளுக்குத் தமிழ் தெரிஞ்சால் என்ன தெரியாவிட்டால்  என்ன என்று விட்டிற்றீரோ ???..!! ஒன்று மட்டும் தெரிஞ்சு கொள் சந்தானம் என்ன தான் வெளி நாட்டுக் காரன் இந்த நாட்டில எங்களையும் மனுசரா மதிச்சு வாழ விட்டாலும் இந்த நாடோ இந்த நாட்டு மொழியோ எங்களுடைய அடையாளம் கிடையாது .காலப் போக்கில இந்த நாட்டில ஒரு பிரச்சனை என்று வந்தாலே போதும் இனத் துவேசம் சும்மா விடாது உன்ர பிள்ளைகளையோ அல்லது உன்ர பேரப் பிள்ளைகளையோ ஓட ஓட விரட்டும் காலமும் வரும் அந்த நேரத்தில தான் எல்லாருக்கும் ஒரு விஷயம் விளங்கும் .என்ன தான் ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும் தன் நாடு தன் மக்கள் தன் தாய் மொழி எவ்வளவு முக்கியம் எண்டு .

அதுக்காக எல்லாத் தமிழனும் உன்ன மாதிரியே இருக்கினம் எண்டு நினைக்காத வேலைக்குப் போறதோட கொஞ்சம் வெளியிலையும் வந்து பார் எங்கட நாட்டு மக்கள் தன் இனத்தினுடைய விடுதலைக்காகவும் கலை கலாச்சாரத்தைப் பேணிப் பாது காப்பதர்க்காவும் எவ்வளவு போராடுகின்றார்கள் என்று ! என்னதான் போத்து மூடிக் கொண்டு போனாலும் மச்சுப் போற எலும்பு மச்சுத் தான் போகும் வெள்ளைக் காரனுக்கு இல்ல எங்களுக்கு .நீயும் உன்ர காலில போட்டிருக்கிற சப்பாத்தும் மலிவு விலை உடுப்பும் இப்புடியே குடும்பப் பொறுப்பில இருந்து விடு படும் என்றால் குறைஞ்சது 55 வயசுக்கெண்டாலும் இருப்ப அது எங்க நடக்கப் போகுது ?....இரவு பகலா பட்டை அடிச்சு வாற காச வீட்டு வாடகைக்கும் வருமான வரிக்கும் ஆசுப்பத்திரிக்கும் குடுத்திற்று விட்டத்தைப் பார்க்கவே சரியாய் இருக்கும் இதில இந்த நாடே கெதி எண்டு கிடக்கவா முடியும் ?...

நம்ம நாடு விடுதலை அடைய வேணும் எங்களுடைய சொந்த பந்தங்கள் எல்லாரும் ஒண்ணா வாழ வேணும் எண்டு நின அதையே பிள்ளையளுக்கும் சொல்லி வளத்துக் கொண்டு வா .எனக்கு அடுத்தாற் போல என்னுடைய பரம்பரைய வளத்துக் கொண்டு போறதும் உன்னுடைய கடமை தான் .இந்த நாட்டில இருந்து கொண்டே எங்களுடைய முகவரிகளை நீயில்ல எந்தத் தமிழனும் துலைக்க நினைக்கிறது பாவம் இதனால ஒரு இனமே அழிந்து போகும் தமிழனது இனம் அழியாமல் இருக்க வேணும் என்றால் முதலில் உன் வீட்டில தமிழை மட்டும் பேசு ஆகக் குறைஞ்சது பேச்சுத் தமிழாவது கொஞ்சம் வாழட்டும்  .

பெண்ணைக் கொடுத்ததால மட்டும் இல்ல நான் உனக்கு மாமன் நீ என் சகோதரியின் வயிற்றில்  பிறந்தவன் உன்னைத்  தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்தவன் நான் என் போல மாமனும் சித்தப்பனும் பாட்டன் பாட்டியும் நீ பெத்த வாரிசுகளுக்கும் தேவை சந்தானம் நான் பேசப் பேச இவ்வளவு நேரமும் மௌனமாக  கேட்டுக் கொண்டு நின்றாயே அது தான்ரா  நீ எனக்கு காட்டிய மரியாதை அன்பு மூத்தோரை மதிக்கும் பண்பு இதெல்லாம் உன்னுடைய பிள்ளைகளுக்கும் தெரிஞ்சிருக்க வேணும் .உறவு முறையே சொல்லத் தெரியாமல் ஆளையாள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டே போனால் காலப் போக்கில கூடப் பிறந்த சகோதரத்தின் பிள்ளைகளும் அன்னியர் போலத் தான் தெரியும் .அதுனால ஒரே வேலையும் வீடும் தான் வாழ்க்கை என்று இல்லாமல் நீயும் சொந்தம் பந்தம் என்று உறவாடி வா பிள்ளையளுக்கும் அந்த உறவு முறைகளைச் சொல்லி வள சந்தானம் வேற்று மொழியில படிச்சாலும் தாய் மொழியைச் சொல்லிக் குடுய்யா எங்க பரம்பர ஆண்ட பூமியில இந்த வித்துக்கள் விருட்சமா வளர வேணும் வளர வேணும் வளர ....

ஆடிக்கொண்டே இருந்த கதிரை சட்டென நிக்க அருகில் இருந்த தண்ணீர்ச் செம்பு கவுண்டு விழவும் மலைத்துப் போய் நின்ற சந்தானம் ஓடி வந்து பார்க்கும் போது  சிரித்த முகத்துடன் எதையோ சாதித்து விட்டுச் செல்லும் மகாத்மாவைப் போல் விடை கொடுத்தார் அந்தத் தேசப் பற்றாளன் அவரின் எண்ணங்கள் சிந்தனைகள் தானே நாம் அவசியம் பின்பற்ற வேண்டியவை இதை உணர்ந்த சந்தானம் போன்று இன்னும் எத்தனை எத்தனை உறவுகள் இங்கே வியப்பின் உச்சத்தில் அலைகின்றது !!...

பி .கு :இது ஒரு கற்பனைக் கதையே 

3 comments:

 1. /// பேச்சுத் தமிழாவது கொஞ்சம் வாழட்டும்... எங்க பரம்பர ஆண்ட பூமியில இந்த வித்துக்கள் விருட்சமா வளர வேணும் வளர வேணும் வளர... ///

  சிறப்பு...

  ஆதங்கம் புரிகிறது...

  ReplyDelete
 2. கற்பனைக் கதையாக இருக்க வாய்ப்பில்லை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. தெளிவைத் தரும் அற்புதமான கதை
  யதார்த்தமாகச் சொல்லிப்போனவிதம் அருமை
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து.....

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .